kovil logo

தல வரலாறு

அருள்மிகு கரிமணல் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜடராய ஈஸ்வரர் திருக்கோயிலின் தனிச்சிறப்பு அதன் சுயம்பு மூர்த்தி ஸ்ரீ ஜடராயரும், அவர் தோன்றிய விதமும் ஆகும்.

ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு பழவேற்காட்டை அடுத்த கரிமணல் கிராமத்தில் கால்வாய் தோண்டும் பணிக்காக சில பனைமரங்கள் வெட்டப்பட்டன. அப்போது, ஒரு பனைமரத்தில் இருந்து இரத்தம் சொட்டியது. அம்மரத்தினை வெட்டியவர் மயக்கமுற்றார். மேலும் இதன் தொடர்ச்சியாக ஆன்மீகப் பற்றுள்ள ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய ஸ்ரீ ஜடராயரும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயாரும் நாங்கள் உங்கள் குலதெய்வங்கள் எனவும் என்றும் உங்களுடனே இருப்போம் என்று கூறி மறைந்தனர்.

மேற்கூறிய நிகழ்வுகளைத்தொடர்ந்து அந்த பனைமரத்தையே சுயம்புவாகத் தோன்றிய ஈஸ்வரராக ஏற்று, கரிமணல் கிராமத்தில் 22 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ ஜடராய ஈஸ்வரருக்கும் மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயாருக்கும் கோயில்கள் கட்டப்பட்டன. திருக்கோயிலுக்கென்று ஒரு குளமும், சத்திரமும் பிறகு கட்டப்பட்டன. பிறகு இத்திருக்கோயில் செட்டியார் சமூகத்தினரால் பராமரிக்கபட்டு வந்தது.

இத்திருக்கோயில் தெற்கு நோக்கிய கோயில் என்பது இதன் மற்றுமோர் சிறப்பு அம்சமாகும்.

ஸ்ரீ ஜடராய ஈஸ்வரரையும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனையும் குலதெய்வமாகக் கொண்ட செட்டியார்களும், பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் பல நூற்றாண்டுகளாக இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டுவருகின்றனர்.

கரிமணல் கிராமம் சென்னை-பழவேற்காட்டை அடுத்து உள்ளது. பழவேற்காட்டில் இருந்து 1 மணி நேரம் படகு பயணம் மேற்கொண்டு அடையலாம்.

புதிய கோயில்

தற்போதைய நிலையில் கரிமணல் கிராமம் (ஸ்ரீ ஜடராயர் கோயில்) ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதள பகுதிக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. ராக்கெட் ஏவுதள கேந்திரத்தின், பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு கரிமணல் கிராமத்தை (ஸ்ரீ ஜடராயர் கோயிலை) கையகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கோயிலின் அப்போதைய தர்மகர்த்தாவாக இருந்த திரு. சொக்கலிங்கம் செட்டியார் அவர்கள், 1985-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத் துறையினரிடம் கரிமணல் ஸ்ரீ ஜடராயர் கோயிலை ஒப்படைத்தார். பிறகு கரிமணல் கிராமத்திற்கும் அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் செல்ல தடை விதிக்கபட்டது. இதனால், ஸ்ரீ ஜடராயர் கோயிலுக்கு பக்தர்களின் வருகையும், கோயிலின் நித்ய பூஜைகளும் தடைபட்டன. மேற்கூறிய காரணங்களால் கோயிலின் சத்திரமும், கட்டிடமும் பழுதடைந்தன.

இந்நிலையைப் போக்கவும் கோயிலின் உற்சவமூர்த்தி சிலைகளைக் காக்கவும் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெருமுயற்சி மேற்கொண்டனர். இக்கோயிலின் உற்சவர் சிலைகளை பழவேற்காட்டை அடுத்துள்ள திருபாலைவன ஈஸ்வரர் கோயிலில் வைத்து ஏறக்குறைய 10 வருடங்கள் பாதுகாத்தனர்.

மேற்கூறிய நிலையைப் போக்க ஸ்ரீ ஜடராயரையும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியையும் குலதெய்வமாகக் கொண்ட அனைத்து சமூகத்தாரின் ஒப்புதலுடன் அரசு பழவேற்காட்டை அடுத்துள்ள எடமணி கிராமத்தில் அளித்த ஏறக்குறைய 3 ஏக்கர் நிலத்தில் புதிதாக ஸ்ரீ ஜடராயருக்கும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயாருக்கும் கோயில் கட்டத் தீர்மானிக்கப்பட்டது.

புதிய கோயில் கட்டிட வேலைகள் முடிந்தபின், கரிமணல் ஸ்ரீ ஜடராயர் கோயில் வளாகத்தில் இருந்த மற்றொரு பனை மரத்தினை தேர்வு செய்து அதனை எடமணி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய கோயிலுக்கு கொண்டு வந்தனர். புதிய கோயிலில் சிவாச்சாரியார்களால் ஆகம விதிப்படி மண்டல பூஜைகள் செய்து பின் கரிமணல் கிராமத்தில் இருந்தது போன்றே ஸ்ரீ ஜடராயரை தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைப் போன்றே கரிமணல் ஸ்ரீ ஜடராயர் கோயிலில் இருந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனின் சிலையும் உரிய பூஜைகளுடன் எடமணியில் கட்டபட்ட புதிய கோயிலுக்கு எதிர்த்திசையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஸ்ரீ ஜடராயர் சிவனின் அம்சம் என்று சிவாச்சாரியார்கள் மற்றும் சமூகப்பெரியோர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிவலிங்கத் திருமேனியும், நந்தி தேவர் சிலையும், சண்டிகேஸ்வரர் சிலையும், ஸ்ரீ சாந்தநாயகி அம்மன் சிலையும் உரிய பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும், முழு முதற்கடவுள் வினாயகர், மற்றும் வள்ளி தேவசேனை உடனுறை முருகப்பெருமானுக்கும் சிலைகள் உரிய பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

முதல் கும்பாபிஷேகம் : 7-7-1995

பழவேற்காடு எடமணி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜடராய ஈஸ்வரர் கோயில் நூதன திருக்கோயில் கும்பாபிஷேகம் யுவ ஆண்டு, ஆனி மாதம், 23 ஆம் நாள் வெள்ளிக்கிழமை, ஸ்வாதி நட்சத்திரத்துடன் கூடிய சுப தினத்தில் (7-ஜூலை-1995) திரு. T. சுப்ரமணிய செட்டியார் (தலைவர்) திரு. V.E. சண்முகம் செட்டியார் (துணை தலைவர்) திரு. P.T. திருவேங்கடம் செட்டியார் (பொருளாளர்) திரு. K.S.C. சுந்தரவதனம் (செயலாளர்) திரு. M.P. ரவிச்சந்திரன் (துணை செயலாளர்) திரு. காசி விஸ்வநாத செட்டியார் (கௌரவ ஆலோசகர்) ஆகியோரைக் கொண்ட கோயில் நிர்வாகக்குழு மற்றும் திருப்பணிக்குழுவின் முன்னிலையிலும், சர்வ சாதகம் கந்தசாமி சிவாச்சாரியார் (பழவேற்காடு) அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இரண்டாம் கும்பாபிஷேகம் : 3-7-2011

மேற்படி கும்பாபிஷேகம் நன்னீராட்டு திருப்பணி 2009 ஆம் ஆண்டு வாஸ்து நன்னாளில் துவக்கப்பட்டு, கோயில் சுற்றுபிரஹாரம் அங்கபிரதக்ஷ்ணம் செய்வதற்கு ஏற்ற வகையிலும் உற்சவர் மண்டபம், அங்காள பரமேஸ்வரி மற்றும் சாந்த நாயகி மண்டபம், கற்பக விநாயகர் கூடிய நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்ரீ கர ஆண்டு ஆனி திங்கள் 18 ஆம் நாள் (03-07-2011) ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி பூச நட்சத்திரம், சித்தயோக கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் சந்திர மஹா நல்ஓரையில், திருக்குட நன்னீராட்டு விழா திரு P.T. திருவேங்கடம் (தலைவர்), திரு M.P. ரவிச்சந்திரன் (செயலாளர்), திரு. S.T. ராஜன் (பொருளாளர்) ஆகியோரைக் கொண்ட கோயில் நிர்வாக குழு மற்றும் திருப்பணிக்குழு முன்னிலையில், திரு சர்வசாதகம் ஆயிரம் பிறை கண்ட சிவ ஸ்ரீ கந்தசாமி சிவாச்சாரியார், திரு சிவ ஸ்ரீ K. நித்தியானந்த சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

kovil logo